Monday, February 21, 2005

மடிந்து போ!

தேனைப் பொழிந்தும் கனிகள் சொரிந்தும்
செங்கரும்பைப் பிழிந்தும்
ஆநெய் கறுவாஏலம் கலந்தும்
அமுதாய்த் தமிழ்ப் புலவன்
ஊனை உயிரை உருக்கும் தமிழை
உன்றனுக்கே தந்தான்...
சோணைப் பயலே! தமிழை இழந் தும்
தூங்கி நின்றாயோடா?

முத்துக் குறளும் காப்பிய மைந்தும்
முதுகாப்பியன் தமிழும்
பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
பதிகமும் உலாநூலும்
தித்திக்கும் கம்பன் புகழேந்தி
தேன் தமிழும் வீழ்ந்தே
செத்துத் தொலையப் பகை பொங்கியது!
சிரம் தாழ்ந்தனையோடா?

காள மேகக் கவிதை மழையும்
கவி பாரதி தமிழும்
கோலத் தேம்பா வணியும் அழகு
கொஞ்சு நற்சீறாவும்
தாளம் போட்டு வாழாப் பாரதி
தாசன் வெறித் தமிழும்
ஏலம் போட்டார் பகைவர்! அடநீ
எங்குற்றாயோடா?

முன்னைத் தமிழன் அன்னைத் தமிழை
முக்கூடல் நிறுவி
கண்ணாய் உயிராய் ஓம்பிய காலம்
கனிந்த புகழெல்லாம்
உன்னை ஒருதாய் உருவாக்கியதால்
உடைந்து துகள்படவே
மண்ணானது மானம் என வாழ்ந்தாய்!
மடிந்துபோ தமிழா!

காசி ஆனந்தன்

களம் புகுவாய்!

மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும்
தீனி சமைத்தவனே! தமிழ்
போனதடா சிறை போனதடா! அட
பொங்கி எழுந்திடடா!

காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை!
பூட்டு நொறுக்கிடுவாய்! நிலை
நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி!
ஏற்று தமிழ்க் கொடியே!

முந்து தமிழ்மொழி நொந்து வதைபட
இந்தி வலம் வரவோ? இது
நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு!
வந்து களம் புகுவாய்!

நாறு பிணக்களம் நூறு படித்துநம்
வீறு மிகுந்த குலம் பெறும்
ஊறு துடைத்திடு மாறு புறப்படு!
ஏறு நிகர்த்தவனே!

நாலு திசைகளும் ஆள நடுங்கிய
கோழை எனக்கிடந்தாய்! மலைத்
தோளும் குனிந்தது போலும்! விழித்தெழு
காலம் அழைக்குதடா!

காசி ஆனந்தன்

தமிழ்மேல் ஆணை!

தாயே... தமிழே!
தலை கவிழ்ந்த பொற்செல்வி!
நீ கலங்க வேண்டாம்...
வருங்காலம் நின் காலம்!

அன்னாய்... இதுகேள்!
அடுத்த பரம்பரையில்
பொன்னால் முடிநீ
புனை நாள் இவண் செய்வேன்!

எள்ளி நகைத்து
நினைப்பழிப்போன் செந்நீர்
வெள்ளம் குளித்து
விளையாடுவேன் தாயே!

சத்தை இழந்த தமிழ்ச்
சாதி பிழைக்க நான்
பத்தாயிரங் கவிதை
பாடாமல் போவேனோ?

தாயே! துயரம்
தவிர்த்திரடி... மாற்றானை
நாயாய் அடித்து
நடுத்தெருவில் வைக்கின்றேன்!

என்னுயிரைத் தூக்கி
எறிந்து தமிழணங்கே
அன்னை நினதுயிராய்
ஆவேன் நான்... ஆணையடி!

காசி ஆனந்தன்

பாவலரே!

என்ன கவி எழுதுகிறீர்
பாவலரே! போலிகளாய்
இருக்கின்றீர்கள்!
கன்னி அருந்தமிழணங்கு
கையிரண்டில் விலங்குடையாள்
கண்ணீர் கண்டும்
செந்நெருப்பு விழிகொண்டு
சீறியெழ மாட்டீரோ?
சீச்சி! வானில்
புண்ணிருந்தால் போலிருக்கும்
நிலாவினையும் காதலையும்
புனைகின்றீரே!

பொங்கு வெறித் தமிழ்கொண்டு
போர்க்களத்தே ஒளவையென்னும்
பூவை அந்நாள்
செங்குருதி குளித்திருந்த
தமிழ்மன்னர் சிறப்பெல்லாம்
கவிதை ஆக்கிச்
சங்க மணித் தமிழ்தந்தாள்...
அட நீங்கள் தாய்த்தமிழை
மறந்து நாட்டில
தெங்கிளநீர் முலைபாடித்
திரிகின்றீர்... கவிஞர்களா?
செத்துப் போங்கள்!

ஊர் பற்றி மொழி பற்றி
ஒரு பொழுதேனும் நீவிர்
உணர்கின்றீரா?
தீ பற்றி எரிகின்ற
வீட்டினிலே இசைபாடிச்
சிரிக்கின்றீர்கள்?
வாய்பற்றி எரியாதா?
தமிழன்னை மனம் நொந்து
வயிறெரிந்தால்
நீர்பற்றும் எழுத்தாணி
நொறுங்காதா? விளையாடல்
நிறுத்திமின்கள்!

சொல்லடுக்கிச் சொல்லடுக்கி
நீர் சொரிந்த பாடலெல்லாம்
போதும்... மாற்றார்
பல்லுடைத்து நமக்குற்ற
பழிதுடைக்க நாலுகவி
படைப்பீர்... ஓடி
வில்லெடுத்து வேலெடுத்துத்
தமிழிளைஞர் வெளிக்கிளம்ப
நெருப்பு வீசும்
சொல்லெடுப்பீர்... பாவலரே!
இல்லையெனில் தொழில் விடுங்கள்!
அதுவும் நன்றே!

காசி ஆனந்தன்


இவரது முந்தைய படைப்பு:

1.தமிழா! நீ பேசுவது தமிழா...?


படைப்புகளை அனுப்ப:

தமிழா! நீ பேசுவது தமிழா...?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

காசி ஆனந்தன்